inna40, iniyavai40, kalavazhi40 & muthumozikkAnchi (in tamil script, unicode format) (original) (raw)
patinenkiizkannakku noolkaL -I
inna40, iniyavai40,
kalavazhi40 & muthumozikkAnchi
(in tamil script, unicode/utf-8 format)
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் -I
இன்னா நாற்பது, இனியவை நாற்பது
களவழி நாற்பது & முதுமொழிக் காஞ்சி
Acknowledgement:
Our Sincere thanks go to Dr.K. Kalyanasundaram for his assistance in the preparation of this work.
This webpage presents the Etext in Tamil script, in Unicode encoding (utfi-8 format).
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் -I
இன்னா நாற்பது (கபிலர்), இனியவை நாற்பது (பூதஞ்சேந்தனார்)
களவழி நாற்பது (பொய்கையார்) &
முதுமொழிக் காஞ்சி (மதுரைக் கூடலூர் கிழார்)
1. இன்னா நாற்பது : கபிலர் இயற்றியது (கி பி 50-125)
(பாட வேற்றுமைகள் @ % & குறிகள் கொண்டு காட்டப்பட்டுள்ளது )
கடவுள் வாழ்த்து
முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னா
பொற்பனை வெள்ளையை@ யுள்ளா தொழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னா% வாங்கின்னா
சத்தியான் றாடொழா தார்க்கு.
@பொற்பன வெள்ளியை %மன்றப்பின்னாது
நூல்
பந்தமில் லாத மனையின் வனப்பின்னா
தந்தையில் லாத புதல்வ னழகின்னா
அந்தண ரில்லிருந் தூணின்னா@ வாங்கின்னா
மந்திரம் வாயா விடின். 1
@ ஊணின்னாது
பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா
ஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னா
பாத்தில் புநடைவை யுடையின்னா@ வாங்கின்னா
காப்பாற்றா வேந்த னுலகு. 2
@உடையின்னாது
கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா
நெடுநீர் புணையின்றி நீந்துத லின்னா
கடுமொழி யாளர் தொடர்பின்னா வின்னா
தடுமாறி வாழ்த லுயிர்க்கு. 3
எருதி லுழவர்க்குப் போகீர மின்னா
கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா
திருவுடை யாரைச் செறலின்னா வின்னா
பெருவலியார்க் கின்னா செயல். 4
சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா
உறைசேர்@ பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா
முறையின்றி யாளு மரசின்னா வின்னா
மறையின்றிச் செய்யும் வினை. 5
@புரைசேர்
அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா@
மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா
இடும்பை யுடையார் கொடையின்னா வின்னா
கொடும்பா டுடையார்வாய்ச் சொல். 6
@ கடு மொழியின்னா
ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா
நாற்ற மிலாத மலரி னழகின்னா
தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா
மாற்ற மறியா னுரை. 7
பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா
நகையாய நண்பினார் நாரின்மை யின்னா
இகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னா
நயமின் மனத்தவர் நட்பு. 8
கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா
வள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா
வண்மை யிலாளர் வனப்பின்னா வாங்கின்னா
பண்ணில் புரவி பரிப்பு. 9
பொருளணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா
இருள்கூர் சிறுநெறி தாந்தனிப்போக் கின்னா
அருளில்லார் தங்கட் செலவின்னா வின்னா
பொருளில்லார் வண்மை புரிவு. 10
உடம்பா டில்லாத மனைவிதோ ளின்னா@
இடனில் சிறியரோ டியர்த்தநண் பின்னா
இடங்கழி யாளர் தொடர்பின்னா வின்னா
கடனுடையார் காணப் புகல். 11
@மனைவி தொழி லின்னா
தலைதண்ட மாகச் சுரம்போத லின்னா
வலைசுமந் துண்பான் பெருமித மின்னா
புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா வின்னா
முலையிள்ளாள் பெண்மை விழைவு. 12
மணியிலாக் குஞ்சரம் வேந் தூர்த லின்னா
துணிவில்லார் சொல்லுந் தறுகண்மை யின்னா
பணியாத மன்னர்ப் பணிவின்னா வின்னா
பிணியன்னார் வாழு மனை. 13
வணரொலி@ யைம்பாலார் வஞ்சித்த லின்னா
துணர்தூங்கு மாவின் படுபழ மின்னா
புணர்பாவை யன்னார் பிரிவின்னா வின்னா
உணர்வா ருணராக் கடை. 14
@வணரொளி
புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா
கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா
இல்லாதார் நல்ல விருப்பின்னா@ வாங்கின்னா
பல்லாரு ணாணப் படல். 15
@விழைவின்னா
உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா
நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனியின்னா
கண்ணி லொருவன் வனப்பின்னா வாங்கின்னா
எண்ணிலான் செய்யுங் கணக்கு. 16
ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னா
மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா
நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா
ஈன்றாளை யோம்பா விடல். 17
உரனுடையா னுள்ள மடிந்திருந்த லின்னா
மறனுடை யாளுடையான் மார்பார்த்த லின்னா
சுரமரிய கானஞ் செலவின்னா வின்னா
மனவறி யாளர்@ தொடர்பு. 18
@அகம்வறியாளர்
குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா
நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா
நலத்தகையார் நாணாமை யின்னாவாங் கின்னா
கலத்தல் குலமில் வழி. 19
மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா
வீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா
மாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா
மூரி யெருத்தா லுழவு. 20
ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா
பாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னா
மூத்த விடத்துப் பிணியின்னா வாங்கின்னா
ஒத்திலாப் பார்ப்பா னுரை. 21
யானையின் மன்னரைக் காண்ட னனியின்னா
ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா
தேனெய் புளிப்பிற் சுவையின்னா வாங்கின்னா
கான்யா@ றிடையிட்ட வூர். 22
@ கானாறு
சிறையில்லாத மூதூரின் வாயில்காப் பின்னா
துறையிருந் தாடை கழுவுத லின்னா
அறைபறை யன்னவர்@ சொல்லின்னா வின்னா
நிறையில்லான் கொண்ட தவம். 23
@அறைபறை யாயவர்
ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா
தீமை யுடையா ரயிலிருந்த னன்கின்னா
காமமுதிரி னுயிர்க்கின்னா@ வாங்கின்னா
யாமென் பவரொடு நட்பு. 24
@உயிர்க்கின்னாது
நட்டா ரிடுக்கண்கள் காண்டல் நனியின்னா@
ஒட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னா%
கட்டில்லா மூதூ ருறையின்னா வாங்கின்னா
நட்ட கவற்றினாற் சூது. 25
@ இடுக்க ணனிகண்டா னன்கின்னா
% கண்டாற் பெரிதின்னா
பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா
அரியவை செய்து மெனவுரைத்த லின்னா
பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னா
பெரியோர்க்குத் தீய செயல். 26
பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா
கிழமை யுடையார்க்@ களைந்திடுத லின்னா
வளமை யிலாளர் வனப்பின்னா வின்னா
இளமையுண் மூப்புப் புகல். 27
@கிழமை யுடையாரை
கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா
வல்லாதான் சொல்லு முரையின் பயனின்னா
இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னா
கல்லாதான் கோட்டி கொளல். 28
குறியறியான் மாநாக@ மாட்டுவித்த லின்னா
தறியறியா% னீரின் பாய்ந்தாட& லின்னா
அறிவறியா மக்கட் பெறலின்னா வின்னா
செறிவிலான் கேட்ட மறை. 29
@மானாகம் %இன்னா தறிவறியான்
& கீழ்நீர்ப்பாய்ந்தாடுதல்
நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா@
கடுஞ்சின வேழத் தெதிர்சேற லின்னா
ஒடுங்கி யரவுறையு மில்லின்னா வின்னா
கடும்புலி வாழு மதர். 30
@ நெடுமார்நீள் கோட்டுயர் பாஅய்த லின்னா
பண்ணமையா யாழின்கீழப் பாடல் பெரிதின்னா
எண்ணறியா மாந்தர்@ ஒழுக்குநாட் கூற்றின்னா
மண்ணின் முழவி னொலியின்னா வாங்கின்னா
தண்மை யிலாளர்% பகை. 31
@ எண்ணறிய மாந்தர் %தன்மையிலாளர்
தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா
முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா
நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா
தொன்மை யுடையார் கெடல். 32
கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா
முள்ளுடைக் காட்டி னடத்த னனியின்னா@
வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா
கள்ள மனத்தார் தொடர்பு. 33
@ நடக்கி னனியின்னா
ஒழுக்க மிலாளார்க் குறவுரைத்த@ லின்னா
விழுத்தகு நூலும்% விழையாதார்க் கின்னா
இழித்த தொழிலவர் நட்பின்னா வின்னா
கழிப்புவாய் மண்டிலங் கொட்பு. 34
@ ஒழுக்கமிலாளர் குறைவுரைத்தல்
%விழித்தகுநூலும்
எழிலி யுறைநீங்கி னீண்டையார்க் கின்னா
குழலி னினிய@ மரத் தோசைநன் கின்னா
குழவிக ளுற்ற பிணியின்னா வின்னா
அழகுடையான் பேதை யெனல். 35
@குழலினிய
பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா
நெடுமாட நீணகர்க் கைத்தின்மை யின்னா
வருமனை பார்த்திருந் தூணின்னா வின்னா
கெடுமிடங் கைவிடுவார் நட்பு. 36
நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
துறையறியா னீரிழிந்து@ போகுத லின்னா
அறியாண் வினாப்படுத லின்னாவாங் கின்னா
சிறியார்மேற் செற்றங் கொளல். 37
@துறையறியா நீரிழிந்து
பிறர்மனையாள் பின்னோர்க்கும் பேதைமை யின்னா
மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா
வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா
திறனிலான் செய்யும் வினை. 38
கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா
கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா
கொடுத்த விடாமை கவிக்கின்னா வின்னா
மடுத்துழிப் பாடா விடல். 39
அடக்க முடையவன் மீளிமை யின்னா
துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா
அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா
அடக்க வடங்காதார் சொல். 40
இன்னா நாற்பது முற்றிற்று
2. இனியவை நாற்பது : பூதஞ்சேந்தனார் இயற்றியது
( இனியது நாற்பது, இனிது நாற்பது, இனிய நாற்பது என்னும் பெயர்களானும் இந்நூல் வழங்குதலுண்டு )
கடவுள் வாழ்த்து
கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.
நூல்
பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சலையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. 1
உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்
மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தான்இனிது நன்கு. 2
ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே
நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே
ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே
தேரிற்கோள் நட்புத் திசைக்கு. 3
யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே
ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே
கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே
மான முடையார் மதிப்பு. 4
கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ்
செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்
எய்துங் திறத்தால் இனிதென்ப யார்மட்டும்
பொல்லாங் குரையாமை நன்கு. 5
ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது. 6
அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா னாகல் இனிது. 7
ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
கார்வரை யானைக் கதங்காண்டல் முன்இனிதே
ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை
பேதுறார் கேட்டல் இனிது 8
தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய ராதல் இனிது. 9
கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல்
எனைமாண்புந் தான்இனிது நன்கு. 10
அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப்
பெருமைபோற் பீடுடையது இல். 11
குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
சுழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவுந்தீர் வின்றேல் இனிது. 12
மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே
தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனமொண் றின்றி உயர்ந்த பொருளுடைமை
மானிடவர்க் கெல்லாம் இனிது. 13
குழவி தளர்நடை காண்டல் இனிதே
அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே
வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து
மனனஞ்சான் ஆகல் இனிது. 14
பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற
வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே
மறமன்னர் தங்கடையுள் மாமலைபோல் யானை
மதமுழக்கங் கேட்டல் இனிது. 15
சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது. 16
நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும்
ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே
பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும்
மெய்த்துணையுஞ் சேரல் இனிது. 17
மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே
எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக்
கண்டெழுதல் காலை இனிது. 18
நட்டார்ப் புறங்கூறான் வாழ்தால் நனிஇனிதே
பட்டாங்கு பேணிப் பணிந்தொழுதல் முன்இனிதே
முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது
தக்குழி ஈதல் இனிது. 19
சலவாரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது. 20
பிறன்கைப் பொருள்வெளவான் வாழ்தல் இனிதே
அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறந்தெரிந்து வாழ்தல் இனிது. 21
வருவா யறிந்து வழங்கல் இனிதே
ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே
பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார்
திரிபின்றி வாழ்தல் இனிது. 22
காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே
ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே
பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது. 23
வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே
ஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே
இல்லாது காமுற் றிரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது. 24
ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே
கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கண் தீர்வினிதே
நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது. 25
நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே
உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே
எத்திறத் தானும் இயைவ கரவாத
பற்றினின் பாங்கினியது இல். 26
தானங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே
மானம் படவரின் வாழாமை முன்இனிதே
ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை
கோள்முறையாற் கோடல் இனிது. 27
ஆற்றாமை யாற்றென் றலையாமை முன்இனிதே
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வனிதே
ஆக்க மழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல். 28
கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே
உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே
எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி
ஒளிபட வாழ்தல் இனிது. 29
நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே
மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே
அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத
நன்றியின் நன்கினியது இல். 30
அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே
கடன்கொண்டுஞ் செய்வன செய்தல் இனிதே
சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து
அறிந்துரைத்தல் ஆற்ற இனிது. 31
சுற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே
பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே
தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்
பத்திமையிற் பாங்கினியது இல். 32
ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே
தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே
வாய்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்
தானை தடுத்தல் இனிது. 33
எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே
சொல்லுங்கால் சோர்வின்றச் சொல்லுதல் மாண்பினிதே
புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை
கொள்ளர் விடுதல் இனிது. 34
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே
முற்றான தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே
பற்றினலாய்ப் பல்லுயிர்க்கும் பாத்தூற்றுப் பாங்கறிதல்
வெற்வேறில்@ வேந்தர்க்கு இனிது. 35
@ வெற்றல் வேல்
அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே
செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே
கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது. 36
இளமையை மூப்பென் றுணர்தல் இனிதே
கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
விடமென் றுணர்தல் இனிது. 37
சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே
நட்டா ருடையான் பகையாண்மை முன்இனிதே
எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படுங்
சுற்றா உடையான் விருந்து. 38
பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்இனிதே
துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே
உற்றபே ராசை கருதி அறனொரூஉம்
ஒற்கம் இலாமை இனிது. 39
பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே
வித்துற்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றலிற் காழினியது இல். 40
இனியவை நாற்பது முற்றிற்று
3. களவழி நாற்பது - பொய்கையார் இயற்றியது
(பாட வேறுபாடுகள் @, %, & குறிகள் கொண்டு காட்டப்பட்டுள்ளன)
நாண்ஞாயி றுற்ற செருவிற்கு வீழ்ந்தவர்
வாண்மாய் குருதி களிறுழக்கத் - தாண்மாய்ந்து
முன்பசு@ லெல்லாங் குழம்பாகிப் பின்பகல்%
துப்புத் துகளிற் கெழூஉம் புனனாடான்
தப்பியா ரட்ட களத்து. 1
@முற்பகல் %பிற்பகல்
ஞாட்பினு ளெஞ்சிய ஞாலஞ்சேர் யானைக்கீழ்
போர்ப்பி லிடிமுரசி னூடுபோ மொண்குருதி
கார்ப்பெயல் பெய்தபிற் செங்குளக் கோட்டுக்கீழ்
நீர்த்தூம்பு நீருமிழ்வ போன்ற புனனாடன்
ஆர்த்தம ரட்ட களத்து. 2
ஒழுக்குங் குருதி யுழக்கித் தளர்வார்
இழுக்குங் களிற்றுக்கோ டூன்றி யெழுவர்@
மழைக்குரன் மாமுரசின் மல்குநீர் நாடன்
பிழைத்தாரை யட்ட களத்து. 3
@ எழூஉம்
உருவக் கடுந்தேர் முருக்கிமற் றத்தேர்ப்
பரிதி சுமந்தெழுந்த யானை - யிருவிசும்பிற்
செல்சுடர் சேர்ந்த மலைபோன்ற செங்கண்மால்
புல்லாரை யட்ட களத்து. 4
தெரிகணை யெஃகந் திறந்தவர் யெல்லாம்
குருதி படிந்துண்ட காகம் - உருவிழந்து
குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மால்
தப்பியா ரட்ட களத்து. 5
நானாற் றிசையும் பிணம்பிறங்க யானை
யடுக்குபு வேற்றிக் கிடந்த - இடித்துரறி
யங்கண் விசும்பி னுருமெறித் தெங்கும்
பெருமலை தூறெறிந்@ தற்றே யருமணிப்
பூணேந் தெழின்மார் பியறிண்டேர்ச் செம்பியன் தெவ்
வேந்தரை யட்ட களத்து. 6
@தூவெறிந்து
அஞ்சனக் குன்றேய்க்கும் யானை யமருழக்கி
இங்கு லிகக்குன்றே போற்றோன்றுஞ் - செங்கண்
வரிவரான் மீன்பிறழுங் காவிரி நாடன்
பொருநரை யட்ட களத்து. 7
யானைமேல் யானை நெரிதர வானாது
கண்ணேர் கடுங்கணை மெய்ம்மாய்ப்ப @ - எவ்வாயும்
எண்ணருங் குன்றிற் குரீஇயினம் போன்றவே
பண்ணா ரிடிமுரசிற் பாய்ப்புன னீர்நாடன்
நண்ணாரை யட்ட களத்து. 8
@ மெய்ம்மறைப்ப
மேலோரைக் கீழோர் குறுகிக் குறைத்திட்ட
காலார்சோ டற்ற கழற்கா லிருங்கடல்
ஊணில் சுறபிறழ்வ @ போன்ற புனனாடன்
நேராரை யட்ட களத்து. 9
@இருங்கடலுணீலச்சுறாப்பிறழ்வ
பல்கணை யெவ்வாயும் பாய்தலிற் செல்கலா
தொல்கி யுயங்குங் களிறெல்லாந் - தொல்சிறப்பிற்
செவ்வலங் குன்றம்போற் றோன்றும் புனனாடன்
தெவ்வரை யட்ட களத்து. 10
கழுமிய ஞாட்பினுண் மைந்திகந்தா ரிட்ட@
ஒழிமுரச மொண்குருதி யாடித் - தொழின்மடிந்து
கண்காணா யானை யுதைப்ப விழுமென
மங்குன் மழையி னிதிரு மதிராப்போர்ச்
செங்கண்மா லட்ட களத்து. 11
@மைந்திழந்தாரிட்ட
ஒவாக் கணைபாய வொல்கி யெழில்வேழந்
தீவாய்க் குருதி யிழிதலாற் செந்தலைப்
பூவலங் குன்றம் புயற்கேற்ற போன்றவெ
காவிரி நாடன் கடாஅய்க் கடிதாகக்
கூடாரை யட்ட களத்து. 12
நிரைகதிர் நீளெஃக நீட்டி வயவர்
வரைபுரை யானைக்கை நூற - வரைமேல்
உருமெறி பாம்பிற் புரளுஞ் செருமொய்ம்பிற்
செஎய்பொரு தட்ட களத்து. 13
கவளங்கொள் யானையின் கைதுணிக்கப் பட்டுப்@
பவளஞ் சொரிதரு பைபோற் றிவளொளிய%
வொண்செங் குருதி யுமிழும் புனனாடன்
கொங்கரை யட்ட களத்து. 14
@கைகடுணிக்க %திகழொளிய
கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும்
புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன்
வினைபடு பள்ளிறிய் றோன்றும் செங்கட்
சினமால் பொருத களத்து. 15
பரும வினமாக் கடவித் தெரிமறவர்
ஊக்கி யெடுத்த வரவத்தி னார்ப்பஞ்சாக்
குஞ்சரக் கும்பத்துப் பாய்வன குன்றிவரும்
வேங்கை யிரும்புலி போன்ற புனனாடன்
வேந்தரை யட்ட களத்து. 16
ஆர்ப்பெழுந்த ஞாட்பினு ளாளா ளெதிர்த்தோடித்
தாக்கி யெறிதா வீழ்தரு மொண்குருதி
கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்கைப் போன்றனவே@
ஆர்த்தம ரட்ட களத்து. 17
@விளக்குப்போன்றனவே
நளிந்த கடலுட் டிமிறிசை போலெங்கும்
விளிந்தார் பிணங்குருதி யீர்க்குந் - தெளிந்து
தடற்றிடங் கொள்வாட்@ டளையவிழுந் தார்ச்சே(ய்)
உடற்றியா ரட்ட களத்து. 18
@ தடற்றிலங்கொள்வாள்
இடைமருப்பின்விட்டெறிந்தவெஃகங்கான்@ மூழ்திக்
கடைமணி காண்வரத் தோற்றி% - நடைமெலிந்து
முக்கோட்ட போன்ற களிறெல்லா நீர்நாடன்
புக்கம ரட்ட களத்து. 19
@எஃகங்காழ் % தோன்றி
இரிசிறக ரீர்க்குப் பரப்பி யெருவை
குருதி பிணங்கவருந் தோற்றம் - அதிர்விலாச்@
சீர்முழாப் பண்ணமைப்பான் போன்ற புனனாடன்
நேராரை யட்ட களத்து. 20
@தோற்றந்திரலிலா
இணைவே லெழின்மருமத் திங்கப்புண் கூர்ந்து
கணையலைக் கொல்கிய யானை - துணையிலவாய்த்
தொல்வலி யாற்றித்@ துளங்கினவாய் மெல்ல
நிலங்கால் கவரு மலைபோன்ற செங்கட்
சினமால் பொருத களத்து. 21
@ தொல்வலியிற்றீர
இருநிலஞ் சேர்ந்த குடைக்கீழ் வரிநுதல்
ஆடியல் யானைத் தடக்கை யொளிறுவாள்
ஓடா மறவர் துணிப்பத் துணிந்தவை
கோடுகொ ளொண்மதியை நக்கும்பரம் பொக்குமே
பாடா ரிடிமுரசிற் பாய்ப்புன னீர்நாடன்
கூடாரை யட்ட களத்து. 22
ஏற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து
நெய்த்தோர்ப் புனலு ணிவந்தகளிற் றுடம்பு
செக்கர்கொள் வானிற் கருங்கொண்மூப் போன்றவே
கொற்றவேற் றானைக் கொடித்திண்டோ ர்ச் செம்பியன்
செற்றாரை யட்ட களத்து. 23
திண்டோ ண் மறவ ரெறியத் திசைதோறும்
பைந்தலை பாரிற் புரள்பவை - நன்கெனைத்தும்
பெண்ணையந் தோட்டம் பெருவளி புக்கேற்ற
கண்ணார் கமழ்தெரியற் காவிரி நீர்நாடன்
நண்ணாரை யட்ட களத்து. 24
மலைகலங்கப் பாயு மலைபோ னிலைகொள்ளாக்
குஞ்சரம் பாயக் கொடி யெழுந்து பொங்குபு
வானந் துடைப்பன போன்ற புனனாடன்
மேவாரை யட்ட களத்து. 25
எவ்வாயு மோடி வயவர் துணித்திட்ட
கைவாயிற் கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல்
ஐவாய் வயநாகங் கவ்வி விசும்பிவருஞ்
செவ்வா யுவணத்திற் றோன்றும் புனனாடன்
தெவ்வாரை யட்ட களத்து. 26
செஞ்சேற்றுட் செல்யானை சீறி மிதித்தலால்
ஒண்செங் குருதிகள் தொக்கீண்டி நின்றவை
பூநீர் வியன்றமிடாப்@ போன்ற புனனாடன்
மேவாரை யட்ட களத்து. 27
@பூவியன்ற நீர்மிடா
ஓடா மறவ ருருத்து மதஞ்செருக்கிப்
பீடுடை வாளார்@ பிறங்கிய ஞாட்பினுட்
கேடகத்தோ டற்ற தடக்கைகொண்% டோ டி
இகலன்வாய்த் துற்றிய& தோற்ற மயலார்க்குக்
கண்ணாடி காண்பாரிற் றோன்றும் புனனாடன்
நண்ணாரை யட்ட களத்து. 28
@வாளர் % ஒரி இகலனயா & வாய்துற்றிய
கடிகாவிற் காற்றுற் றெறிய வெடிபாட்டி
வீற்றுவீற் றோடு மயிலினம்போல் - நாற்றிசையும்
கேளி ரிழந்தா ரலறுபவே செங்கட்
சினமால் பொருத களத்து. 29
மடங்க வெறிந்து மலையுருட்டு நீர்போல்
தடங்கொண்ட வொண்குருதி கொள்களி றீர்க்கு
மடங்கா மறமொய்ம்பிற்@ சினமால்
அடங்காரை யட்ட களத்து. 30
@ மடங்கள் மறமொய்ம்பின்
ஓடா மறவ ரெறிய நுதல்பிளந்த
கோடேந்து கொல்களிற்றுக் கும்பத் தெழிலோடை
மின்னுக் கொடியின் மிளிரும் புனனாடன்
ஒன்னாரை யட்ட களத்து. 31
மையின்மா மேனி நிலமென்னு நல்லவள் [தீர்ந்த
செய்யது போர்த்தாள்போற் செவ்வந்தாள்@ - பொய்
பூந்தார் முரசிற் பொருபுன னீர்நாடன்
காய்ந்தாரை யட்ட களத்து. 32
@ செவ்வென்றாள்
பொய்கை யுடைந்து புனல்பாய்ந்த வாயெல்லா
நெய்த லிடையிடை வாளை பிறழ்வனபோல்
ஐதிலங் கெஃகி னவிரொளிவா டாயினவே
கொய்சுவன் மாவிற் கொடித்திண்டோ ர் செம்பியன்
தெவ்வரை யட்ட களத்து. 33
இணரிய ஞாட்பினு ளேற்றெழுந்த மைந்தர்
சுடரிலங் கெஃக மெறியச் சோர்ந் துக்க
குடர்கொண்டு@ வாங்குங் குறுநரி கந்தில்
தொடரொடு கோணாய் புரையு மடர்பைம்பூட்
சேய்பொரு தட்ட களத்து. 34
@ குடர் கொடு
செவ்வரைச் சென்னி யரிமானோ டவ்வரை
ஒல்கி யுருமிற் குடைந்தற்றான் - மல்கிக்
கரைகொண் றிழிதரூஉம் காவிரி நாடன்
உரைசா லுடம்பிடி மூழ்க வரசோ(டு)
அரசுவா வீழ்ந்த களத்து. 35
ஓஓ உவம னுறழ்வின்றி யொத்ததே
காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள்
மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ்மேலா
ஆவுதை காளாம்பி போன்ற புனனாடன்
மேவாரை யட்ட களத்து. 36
அரசர் பிணங்கான்ற நெய்த்தோர் முரசொடு
முத்தடைக் கோட்ட களிறீர்ப்ப - எத்திசையும்
பெளவம் புணரம்பி போன்ற புனனாடன்
தெவ்வரை யட்ட களத்து. 37
பருமப் பணையெருத்திற் பல்யானை புண்கூர்ந்(து)
உருமெறி பாம்பிற் புரளுஞ் - செருமொய்ம்பிற்
பொன்னார மார்பிற் புனைசுழற்காற் செம்பியன்
துன்னாரை யட்ட களத்து. 38
மைந்துகால் யாத்து மயங்கிட ஞாட்பினுட்
புய்ந்துகால் போகிப் புலான்முகந்த வெண்குடை
பஞ்சிபெய் தாலமே போன்ற புனனாடன்
வஞ்சிக்கோ வட்ட களத்து. 39
வெள்ளிவெண் ணாஞ்சிலான் ஞால முழுவனபோல்
எல்லாக் களிறு நிலஞ்சேர்ந்த - பல்வேற்
பணைமுழங்கு போர்த்தானைடச் செங்கட் சினமால்
கணைமாரி பெய்த களத்து. 40
வேனிறத் திங்க வயவரா லேறுண்டு
கானிலங் கொள்ளாக் கலங்கிச் செவிசாய்த்து
மாநிலங் கூறு மறைகேட்ப போன்றவே
பாடா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன்
கூடாரை யட்ட களத்து.
களவழி நாற்பது முற்றிற்று
4. முதுமொழிக் காஞ்சி :மதுரைக் கூடலூர் கிழார் அருளியது
1. சிறந்த பத்து
1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை
2. காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்
3. மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை
4. வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை
5. இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை
6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று
7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று
8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
9. செற்றாரைச் செறுத்தலின் கற்செய்கை சிறந்தன்று
10. முற்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று
2. அறிவுப்பத்து
11. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப
12. ஈரம் உடைமை ஈகையின் அறிப
13. சேரா நல்நட்(பு) உதவியின் அறிப
14. கற்றது உடைமை காட்சியின் அறிப
15. ஏற்ற முடைமை எதிர்கொளின் அறிப
16. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப
17. குத்திரம் செய்தலின் கள்வனாதல் அறிப
18. சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப
19. அறிவுசோர்வு உடைமையின் பிறிதுசோர்வும் அறிப
20. சீருடை யாண்மை செய்கையின் அறிப
3. பழியாப் பத்து
21. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
யாப்பி லோரை இயல்குணம் பழியார்
22. மீப்பி லோரை மீக்குணம் பழியார்
23. பெருமை உடையதன் அருமை பழியார்
24. அருமை யுடையதன் பெருமை பழியார்
25. நிறையச் செய்யாக் குறைவினை பழியார்
26. முறையில் அரசர்நாட் டிருந்து பழியார்
27. செய்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார்
28. அறியாத் தேசத்து ஆசாரம் பழியார்
29. வறியோன் வள்ளியன் அன்மை பழியார்
30. சிறியோர் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்.
4. துவ்வாப் பத்து
31. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பழியோர் செல்வம் வறுமையில் துவ்வாது
32. கழிதறு கண்மை பேடியின் துவ்வாது
33. நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது
34. பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது
35. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது
36. பொய்வே ளாண்மை புலைமையின் துவ்வாது
37. கொண்டுகண் மாறல் கொடுமையின் துவ்வாது
38. அறிவிலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது
39. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது
40. தானோர் இன்புறல் தனிமையின் துவ்வாது.
5. அல்ல பத்து
41. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நீரறிந்து ஒழுகாதான் தாரம் அல்லன்
42. தார(ம்)மா ணாதது வாழ்க்கை யன்று
43. ஈரலில் லாதது கிளைநட் பன்று
44. சோராக் கையன் சொன்மலை யல்லன்
45. நேரா நெஞ்சத்தோன் நட்டோ ன் அல்லன்
46. நேராமற் கற்றது கல்வி யன்று
47. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று
48. அறத்தாற்றின் ஈயாத(து) ஈனை யன்று
49. திறத்தாற்றின் நேர்லா ததுநோன் பன்று
50. மறுபிறப் பறியா ததுமூப் பன்று.
6. இல்லைப் பத்து
51. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
மக்கட் பேற்றின் பெறும்பே(று) இல்லை
52. ஒப்புரவு அறிதலின் தகுவரவு இல்லை
53. வாய்ப்புடை விழைச்சின் நல்விழைச்சு இல்லை
54. வாயா விழைச்சின் தீவிழைச்சு இல்லை
55. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை
56. உணர்விலன் ஆதலின் சாக்காடு இல்லை
57. நசையில் பெரியதோர் நல்குரவு இல்லை
58. இசையின் பெரியதோர் எச்ச மில்லை
59. இரத்தலின் ஊஉங்கு இளிவரவு இல்லை
60. இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பில்லை
7. பொய்ப் பத்து
61. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பேரறவி னோன்இனிது வாழா மைபொய்
62. பெருஞ்சீர் ஒன்றன் வெகுளியின் மைபொய்
63. கள்ளுண் போன்சோர்வு இன்மை பொய்
64. காலம்அறி யாதோன் கையுறல் பொய்
65. மேல்வரவு அறியாதோன் தற்காத் தல்பொய்
66. உறுவினை காய்வோன் உயர்வுவேண் டல்பொய்
67. சிறுமைநோ னாதோன் பெருமைவேண் டல்பொய்
68. பெருமைநோ னாதோன் சிறுமைவேண் டல்பொய்
69. பொருள்நசை வேட்கையோன் முறைசெயல் பொய்
70. வாலியன் அல்லாதோன் தவம்செய் தல்பொய்.
8. எளிய பத்து
71. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
புகழ்வெய் யோர்க்குப் புத்தேள்நா(டு) எளிது
72. உறழ்வெய் யோருக்கு உறுசெரு எளிது
73. ஈரம்வெய் யோர்க்கு நசைகொடை எளிது
74. குறளைவெய் யோர்க்கு மறைவிரி எளிது
75. துன்பம்வெய் யோர்க்கு இன்பம் எளிது
76. இன்பம்வெய் யோர்க்குத் துன்பம் எளிது
77. உண்டிவெய் யோர்க்குப் உறுபிணி எளிது
78. பெண்டிர்வெய் யோர்க்குப் படுபழி எளிது
79. பாரம்வெய் யோர்க்குப் பாத்தூண் எளிது
80. சார்பு இலோர்க்கு உறுகொலை எளிது
9. நல்கூர்ந்த பத்து
81. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
முறையில் அரச(ன்) நாடு நல்கூர்ந் தன்று
82. மிகமூத்தோள் காமம் நல்கூர்ந் தன்று
83. செற்றுடன் உறவோனைச் சேர்தல்நல் கூர்ந்தன்று
84. பிணிகிடந்தோன் பெற்ற இன்பம்நல் கூர்ந்தன்று
85. தன்போற் றாவழிப் புலவிநல் கூர்ந்தன்று
86. முதிர்வுடை யோன்மேனி அணிநல் கூர்ந்தன்று
87. சொற்சொல் லாவழிச் சொலவுநல் கூர்ந்தன்று
88. அகம்வறி யோன்நண்ணல் நல்கூர்ந் தன்று
89. உட்(கு)இல் வழிச்சினம் நல்கூர்ந் தன்று
90. நட்(பு)இல் வழிச்சேறல் நல்கூர்ந் தன்று.
10. தண்டாப் பத்து
91. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்
92. வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான்
93. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்
94. நிற்றல் வேண்டுவோன் தவஞ்செயல் தண்டான்
95. வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்
96. மிகுதி வேண்டுவோன் வருத்தம் தண்டான்
97. இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்
98. துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான்
99. ஏமம் வேண்டுவோன் முறைசெயல் தண்டான்
100. காமம் வேண்டுவோன் குறிப்புச்சொல் தண்டான்.
முதுமொழிக்காஞ்சி முற்றிற்று
This webpage was last revised on 31 July 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).