“‘தங்கலான்’ - தமிழ் சினிமாவின் அடையாளபூர்வமான படங்களில் ஒன்றாக இருக்கும்!” (original) (raw)
தமிழ், மிகப்பெரிய ஆச்சரியம் எனக்கு. எழுத்தாளர்களைப் பெரிதும் மதிக்கக்கூடியவர். அவருக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் சொல்வதை முழுமையாகக் கேட்டுக்கொள்வார்
Published:23 May 2024 2 AMUpdated:23 May 2024 2 AM

பிரீமியம் ஸ்டோரி
இரஞ்சித்துடன் அழகிய பெரியவன்
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகப் பிரச்னைகளையும் பண்பாட்டு அழகியலையும் தன் எழுத்தால் ஆவணப்படுத்தும் தமிழின் முக்கியப் படைப்பாளி அழகிய பெரியவன். புனைவு, கவிதை, கட்டுரை, விமர்சனம் எனப் பல தளங்களிலும் இயங்குபவர். சமீப அடையாளம், திரைப்பட வசனகர்த்தா. அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘தங்கலான்’ படத்தின் வசனகர்த்தா இவர்தான். ‘எலக்சன்’ படத்திலும் வசனம் எழுதியிருக்கிறார். வெயில் அடர்ந்த ஒரு காலையில் அழகிய பெரியவனைச் சந்தித்து உரையாடினோம்.

அழகிய பெரியவன்
‘‘ஒரு புனைவை எழுதும்போது நிறைய சுதந்திரம் இருக்கும். சினிமா ஒரு கூட்டுப் படைப்பு. வரம்புக்குள்ள நின்னு எழுதணும். எங்காவது முரண்பட்டீங்களா?’’
‘‘எழுத்தாளர்களோடு இணைந்து வேலை செய்ய நிறைய இயக்குநர்கள் விரும்புறாங்க. நிறைய எழுத்தாளர்கள் சினிமாவுக்குள்ள வேறு வேறு பங்களிப்புகளைச் செஞ்சுக்கிட்டுதான் இருக்காங்க. எழுத்தாளரின் இடம் எது, இயக்குநரின் இடம் எது என்கிற குழப்பம் வந்தால்தான் முரண் உருவாகும். எழுதுவதென்பது வேறு. அது என் தனிப்பட்ட விஷயம். ஒரு மேஜை கிடைத்தால் எழுத ஆரம்பித்து விடலாம். சினிமா அப்படியில்லை. அங்கே நூற்றுக்கணக்கான மனிதர்கள் இருப்பார்கள். அங்கிருக்கும் எல்லோருக்கும் நம்மைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அங்கு உருவாகிற சிக்கல்களையும் சங்கடங்களையும் நாம் ஒவ்வாமையாக எடுத்துக்கொண்டால்தான் முரண் வரும். சினிமாவின் தன்மையைப் புரிந்துகொண்டு இந்தச் சிக்கல்களைக் கடந்துவிட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. தொடக்கத்தில் இருந்தே எனக்கு இந்தப் புரிதல் உண்டு. அதனால் எந்த முரணும் இல்லை.’’
‘‘ ‘எலக்சன்' படம் உங்க ஏரியாவான ஆம்பூர் பகுதியில நடக்குற கதை. இயக்குநர் தமிழோ ஈரோட்டுக்காரர். கதைக்களம் எப்படி முடிவாச்சு?’’
‘‘வட ஆற்காடு மாவட்டத்தின் வடக்கு எல்லைப்பகுதி இந்தப் படத்தின் கதைக்களம். எனக்கு அது முன்கூட்டியே தெரியாது. இயக்குநர் தமிழுமே இந்த நிலப்பரப்பின் கதையாக அதை எழுதியிருப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை. தமிழிடம் ஒரு கதை இருந்தது. ‘இந்தக் கதைக்கு அழகிய பெரியவன் சரியாக இருப்பார்' என்று தமிழை என்னிடம் அனுப்பி வைத்தவர், எழுத்தாளர் பெருமாள் முருகன்.
தமிழ், மிகப்பெரிய ஆச்சரியம் எனக்கு. எழுத்தாளர்களைப் பெரிதும் மதிக்கக்கூடியவர். அவருக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் சொல்வதை முழுமையாகக் கேட்டுக்கொள்வார். பிறகு நிதானமாக அவரது கருத்தைச் சொல்வார். அவரது கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பாத்திரங்கள் நிறைய இருந்தன. கதையில் வெயில் முக்கியமான அங்கமாக இருந்தது. வசனமெல்லாம் எழுதி முடித்தபிறகுதான் கதைக்களத்தையே முடிவு செய்தோம். நான் அவரை வாணியம்பாடி, குடியாத்தம், பள்ளிகொண்டா பகுதிகளுக்கு எல்லாம் அழைத்துச்சென்று காண்பித்தேன். அவருக்குப் பிடித்திருந்தது. இதுவரை சினிமாவில் பதிவாகாத நிலக்காட்சிகளை இந்தப் படத்தில் காணலாம்.
சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்ற ஒற்றை வரிதான் கதை. அரசியல் என்பது மக்களுக்கானது. மக்கள் தங்களுக்கான அரசியலை உருவாக்கிக்கொள்ளும்போது நடக்கும் சம்பவங்கள்தான் கதை. நான் இயல்பில் ஒரு அரசியல் செயற்பாட்டாளன். தமிழகம் முழுவதும் பயணித்திருக்கிறேன். அரசியல் தலைவர்களோடு தொடர்பில் இருக்கிறேன். தேர்தல் அதிகாரியாக இருந்திருக்கிறேன். இப்படி கலவையான அனுபவம் எனக்கு இருந்ததால், தமிழ் எனக்கிட்ட பணியை சரியாகச் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.’’

அழகிய பெரியவன்
‘‘ ‘தங்கலான்' படத்திற்குள் நீங்க எப்படி வந்தீங்க? படம் எப்படி வந்திருக்கு?’’
‘‘தம்பி பா.இரஞ்சித்தை எனக்கு ரொம்ப நாளாவே தெரியும். என் படைப்புகளை தொடர்ந்து வாசிக்கிறவர். சினிமாவை ஒரு சமூக செயல்பாடா செய்றவர். நாகராஜ் மஞ்சுளேவின் ‘Fandry’ படத்துக்காக சென்னையில் ஒரு நிகழ்வு நடந்தது. நானும் இரஞ்சித்தும் பேசுவதற்காக வந்திருந்தோம். அப்போது தொடங்கி எங்களுக்குள் நெருக்கமான நட்பும் அன்பும் மரியாதையும் உண்டு. சமீபத்தில் ஒருநாள் இரஞ்சித் என்னை அழைத்து, ‘நீங்க டயலாக் ஒர்க் பண்ணித் தரணும்' என்றார். ரொம்பவே மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டேன். உடனடியாக சென்னை வந்து தமிழ்ப்பிரபா, இரஞ்சித்தோடு அமர்ந்து பேசினோம்.
‘தங்கலான்’ தமிழ் சினிமாவின் அடையாளபூர்வமான திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும். காரணம், அது எடுக்கப்பட்ட களம். தமிழர்களுக்கு வரலாறு இருக்கிறது. ஆனால் வரலாற்று ஓர்மை இல்லை என்று சொல்வார்கள். தமிழர்கள் உலகெங்கும் சென்றிருக்கிறார்கள். பல வரலாறுகள் எழுத்தாகக்கூடப் பதிவாகவில்லை. தவிர, வரலாற்றுக்காலம் என்றாலே பகட்டான உடைகளை அணிந்து, இடையில் வாள் செருகி, சம்பந்தமே இல்லாத வசனங்களைப் பேசிக்கொண்டிருப்பவர்களைத்தான் இதுவரை நாம் பார்த்திருக்கிறோம். அதையெல்லாம் ‘தங்கலான்’ உடைக்கும்.’’

இரஞ்சித்துடன் அழகிய பெரியவன்
‘‘நம் மக்களுக்கு பெரிதாக பரிச்சயமில்லாத இடம் கோலார் தங்கச் சுரங்கம். அந்தக் களத்துல நடக்கிற பீரியட் கதைக்கு வசனம் எழுதுறது எவ்வளவு சவாலா இருந்துச்சு?’’
‘‘நிச்சயம் அது சவாலான வேலைதான். ‘தங்கலான்’ ஒரு பீரியட் பிலிம் என்றாலும் குறிப்பிட்ட சில பீரியட்களை அது கடந்து வருகிறது. அதில் உள்ள நிறைய கதைமாந்தர்கள் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள். அந்தந்தக் காலகட்டத்தில் அவர்கள் பேசிய தமிழ், புழங்கிய வார்த்தைகள், சொலவடைகள், பாடல்கள் என நிறைய விஷயங்களைத் தேட வேண்டியிருந்தது. நான் எனது பாட்டியிடம்தான் வளர்ந்தேன். பாட்டியிடம் ஒரு நூற்றாண்டு மொழி இருந்தது. அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. தவிர, புத்தகங்கள், பிரிட்டிஷார் எழுதியிருந்த ஆவணங்கள் உதவி செய்தன. இதற்கெல்லாம் தனிப்பட்டு நிறைய உழைப்பு தேவைப்பட்டது.’’
‘‘ ‘தங்கலான்' படத்துல விக்ரமைப் பார்க்கும்போதே ஆச்சர்யமா இருக்கு. அவர் வசனம் பத்தி என்ன சொன்னார்?’’
‘‘விக்ரம் அளவுக்கு அர்ப்பணிப்புள்ள கலைஞனை நான் பார்த்ததேயில்லை. ஒகேனக்கல்லில் ஷூட்டிங் நடந்தபோது நானும் தமிழ்ப்பிரபாவும் சென்றிருந்தோம். இரஞ்சித் என்னை விக்ரமுக்கு அறிமுகம் செய்து வைத்தார். மேக்கப்போடுதான் இருந்தார். சின்னதாக ஒரு பஞ்ச் பண்ணி வரவேற்றார். நான் ஒரு வசனத்தை அவருக்கு விவரித்தேன். திரும்பத் திரும்பச் சொல்லி, ‘சரியா... சரியா...' என்று கேட்டுக்கொண்டே இருந்தார். பார்வதியும் அப்போது அங்கே இருந்தார். இரஞ்சித் என்னை அறிமுகம் செய்ததுமே ‘வசனம் சூப்பரா இருக்கு சார்' என்று பாராட்டினார். நிறைய வாசிப்பவர் என்று அறிந்தேன். நீண்ட நேரம் இலக்கியம் பேசிக்கொண்டிருந்தோம்.’’

தமிழுடன் அழகிய பெரியவன்
‘‘தலித் அரசியல் செயல்பாடுகள் எப்போதையும்விட தீவிர மடைந்திருக்கும் காலகட்டம் இது. நம்பிக்கைக்குரிய பாதையாக எதைக் கருதுறீங்க?’’
‘‘இன்னைக்கு தலித் அரசியல் வேறு வேறு வடிவங்களை எடுத்திருக்கு. சிலர் அடையாள அரசியல் பேசுகிறார்கள். சிலர் தங்களுக்கான இடத்தை வலியுறுத்துகிறார்கள். சிலர் வாக்கு அரசியலை நோக்கி நகர்ந்து ஜனநாயக அரசியலில் தங்களைப் பொருத்திக்கொண்டு செயல்படுகிறார்கள். இவர்களில் விடுதலைச் சிறுத்தைகளின் அரசியலை முக்கியமானதாக நான் பார்க்கிறேன். இந்திய அளவில் அவர்களின் நகர்வு கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. திருமாவளவன் வெறும் அரசியலை அல்லாமல் தத்துவத்தையும் பேசுகிறார். அவர் பேசுகிற சமத்துவம்தான் தீர்வை நோக்கிக் கொண்டு செல்லும். ‘நாங்கள் தலித்கள்', ‘நாங்கள் தனியாகத்தான் இருப்போம்...' என்கிற அடையாள அரசியலை நான் வெறுக்கிறேன். இன்று இதையெல்லாம் கடந்து சாதியற்ற சமூகத்தோடு இணைவதுதான் தேவையாக இருக்கிறது. அம்பேத்கரும் பெரியாரும் மார்க்ஸும் ஒன்றாகக் கைகோப்பது அந்த இடத்தில்தான்!’’